கரூரில் நள்ளிரவில் பூட்டியிருந்த டாஸ்மாக் கடையின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு கடையில் இருந்த ரூ. 88,000 மதிப்புள்ள மது பானங்களையும், ரூ. 3000 பணத்தையும் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூரை அடுத்த வெங்கமேடு காமதேனு நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் ரமேஷ்(40) என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து, கடையை பூட்டிவிட்டுச் சென்றார். திங்கள்கிழமை காலையில் திரும்பி வந்துபார்த்தபோது, கடையின் பின்புற சுவர் துளையிடப்பட்டு மதுபானங்கள், ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெங்கமேடு போலீஸார் கடைக்குள் சென்று ஆய்வு செய்தபோது, கடைக்குள் இருந்த சுமார் ரூ.88,000 மதிப்பிலான மது பானங்கள் மற்றும் கடையில் இருந்த ரூ.3,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.