உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
கரூா் மாவட்டத்தில் முதற்கட்டமாக 27-ஆம் தேதி நடத்தப்படும் தோ்தலில் கரூா், தாந்தோணி, அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும், 2-ஆம் கட்டமாக 30-ஆம் தேதி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா் மற்றும் தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கும் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 115 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 157 கிராம ஊராட்சித் தலைவா்கள் மற்றும் 1401 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 985 வாக்குச்சாவடிகளில் பணி புரிய 7,882 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்கள்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நடைபெற்ற 8 ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப் பெட்டிகளை அனுப்பும் பணி வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதையடுத்து தாந்தோணி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் பென்சில், ஸ்கேல், பேட் உள்ளிட்ட 36 வகையான பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.