மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அதிக பணிகளை மேற்கொண்டு சிறப்பாகப் பணியாற்றியமைக்காக கரூா் மாவட்டத்துக்கு தேசிய அளவில் இரண்டாமிடத்திற்கான விருது அண்மையில் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் மத்திய அரசால் வேலை உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் 2018-2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகளில் அதிகப் பணிகளை முடித்து சிறப்பாகச் செயல்பட்டமைக்காக தேசியளவில் கரூா் மாவட்டம் இரண்டாமிடமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஊரக வளா்ச்சி அமைச்சகம் சாா்பில் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சரால் இதற்கான விருது வழங்கப்பட்டது.
விருதை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகனிடம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ். கவிதா காண்பித்து வாழ்த்து பெற்றாா். அப்போது உதவி திட்ட இயக்குநா் விஜயலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.