கரூரில் மருந்தாளுநர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்டத் தலைவர்கள் சுரேஷ்குமார்(கரூர்), செல்வம் (நாமக்கல்), கௌதமன் (திருப்பூர்), வல்லவன் (கோவை) ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர்கள் செந்தில் (திருச்சி), ரமேஷ்பாபு (கோவை) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுப்ரமணியன், கரூர் மாவட்டத் தலைவர் மு.மகாவிஷ்ணன் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினர்.
இதில் அரசுமருத்துவமனைகளில் காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், சுகாதாரப்பணிகள் அலுவலக மருந்துக் கிடங்கில் தலைமை மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் மருந்தாளுநர்கள் திரளாகப் பங்கேற்றனர்.