கரூர் மாவட்டத்தில் 5 டிஎம்சி நீரை சேமிக்கும் வகையில் மேலும் மூன்று புதிய கதவணைகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மக்களைத்தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நோக்கத்தில் முதல்வரால் கடந்த 19-ஆம் தேதி முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் அண்மையில் தொடக்கி வைக்கப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் மண்மங்கலம் வட்டம் சோமூர், நெரூர் தென்பாகம் மற்றும் நெரூர் வடபாகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் வியாழக்கிழமை பெற்ற அமைச்சர் மேலும் பேசியது:
கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வரும் செப். 7-ஆம் தேதி வரை கிராமம் கிராமமாக அரசுத் துறை அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்கள்.
சுமார் ரூ.300 கோடியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காவிரியில் சுமார் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்ட அனுமதி, கரூர் மாவட்டத்திற்கு புதிதாக புகழூர் வட்டம், அரவக்குறிச்சி பகுதியில் ரூ. 250 கோடியிலும், தாந்தோணி பகுதிக்கு ரூ.81.4 கோடியிலும் குடிநீர் திட்டப்பணிகள், நெரூர் உன்னியூர் பாலம், நெரூர் மற்றும் குளித்தலை பகுதியில் தலா ஒரு கதவணைகள் கட்ட ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு என பல திட்டங்களை கரூர் மாவட்டத்திற்காக வழங்கியவர் முதல்வர் பழனிசாமி. கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள மாயனூர் கதவணையோடு சேர்த்து புதிதாக 3 கதவணைகள் என மொத்தம் நான்கு கதவணைகள் அமையும்போது, மொத்தமாக 5 டி.எம்.சி தண்ணீரை தேக்கக்கூடிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருக்கும் என்றார்.
முன்னதாக தான்தோன்றி ஒன்றியம் கருப்பூரில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை திறந்துவைத்து, அப்பகுதியில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடவுசெய்தார். சோமூர் அரசு உயர்நிலைப்பள்ளில் தனது சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி அவற்றை இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார், முன்னாள் எம்எல்ஏ காமராஜ், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் கமலகண்ணன், நெரூர் வடபாகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.மணிவண்ணன், உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் க. பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.