கரூர்

"ரசாயன வண்ணம் பூசிய விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கூடாது'

29th Aug 2019 07:46 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தி அன்று நீர்நிலைகளில் ரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளை கரைக்கக் கூடாது என மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது.  நீர் நிலைகள்நமக்கு குடிநீர் ஆதாரத்தைத் தருகின்றன. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். 
களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத  மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களையுடைய சிலைகளை உபயோகிக்க வேண்டும்.  ஏரிகளிலும் மற்ற நீர்நிலைகளிலும் விநாயகர் சிலைகளை கரைக்காமல் காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆலோசனையின்படி, கரூர் மாவட்டத்தில் சிலைகளை கரைக்க கண்டறியப்பட்டுள்ள இடங்களான காவிரி ஆற்றின் கரையில் உள்ள தவிட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், மாயனூர் மற்றும் குளித்தலை கடம்பர் கோயில் அருகிலும், அமராவதி ஆற்றில் அரவக்குறிச்சி ராஜபுரம் ஆகிய இடங்களில் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்காத வகையில் அவற்றிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் மட்டும் கரைக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT