கரூர்

பள்ளிவாசல்களில் பணிபுரிவோர் நலவாரியத்தில் சேர குறைதீர் கூட்டம்

29th Aug 2019 07:46 AM

ADVERTISEMENT

பள்ளிவாசல்களில் பணிபுரியும் ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள் நலவாரியத்தில் சேர வரும் 30-ஆம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதராஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள் தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைகாக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் ஆதரவற்ற இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும்,  அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.  
வேறு ஏதாவது நல வாரியங்கள் மூலம் நலத்திட்ட உதவி பெறுபவர்கள் இவ்வாரியம் மூலம் மீண்டும் அதே நல உதவித் திட்டங்களை பெறத் தகுதியற்றவராவார். விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து பெறலாம். 
விண்ணப்பிப்பவர், இந்நல வாரிய உறுப்பினராக பதிவு பெறத் தகுதியுடையவர் என்பதற்கு ஆதாரமாக அவர் பணிபுரியும் பள்ளிவாசல்கள், மதராஸாக்கள் போன்ற நிறுவனத்திலிருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல 
அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
எனவே, வரும் 30-ம் தேதி பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட ஆட்சியரக மக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் உலமாக்கள் (ம) பணியாளர்கள் நலவாரியத்தில் புதிதாக உறுப்பினர்கள் பதியவும், உலமாக்கள் (ம) பணியாளர்கள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து கூட்டம் நடைபெற உள்ளதால் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உலமாக்கள் (ம) நல வாரிய உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT