கரூர்

காவிரி உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டுவர வேண்டும்: 20 கிராம மக்கள் வலியுறுத்தல்

28th Aug 2019 10:23 AM

ADVERTISEMENT

மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் காவிரி உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டுவரவேண்டும் என பஞ்சப்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரியாக கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பட்டி  ஏரி உள்ளது. மழைக்காலங்களில் கடவூர் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரானது நீரோடையாக மாறி மலையின் அருகே உள்ள பொன்னியாறு அணையில் நீர் சேகரமாகிறது. 
பின்னர் அங்கிருந்து வரும் நீர் பஞ்சப்பட்டி ஏரியை வந்தடையும். 1913இல் அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் வெள்ளத்தடுப்பு ஏரியாக இந்த ஏரி அமைக்கப்பட்டது. 1820 ஏக்கர் நிலப்பரப்பையும், 1998 மீ. நீளம் கொண்டதாகவும் காணப்படும் இந்த ஏரிக்கு, நாளடைவில் மழைவளம் குன்றியதால் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி வறண்டே காணப்படுகிறது. 
இதனால் ஏரியை நம்பியிருந்த வயலூர், பஞ்சப்பட்டி, வீரியம்பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியின் பெரும்பாலான விவசாயிகள் தற்போது மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், வங்கக்கடலில் கலக்கும் காவிரி உபரி நீரை, மாயனூரில் இருந்து குழாய் மூலம் பஞ்சப்பட்டி ஏரிக்கு நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சப்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பஞ்சப்பட்டியில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.  கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஏ.பாண்டியன் தலைமை வகித்தார். அழகப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், காவிரி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கடலுக்கும் உபரிநீரை குழாய் மூலம் கொண்டு வந்து பஞ்சப்பட்டி ஏரியில் நிரப்ப மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் 20 கிராம விவசாயிகளும் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT