கரூர்

"கடைமடை வரை நீர் திறக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்'

27th Aug 2019 09:31 AM

ADVERTISEMENT

அமராவதி அணையில் இருந்து கடைமடை வரை தண்ணீர் திறக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கொமதேக மற்றும் அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 284 மனுக்கள் வரப்பெற்றன.  மனுக்களை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற இரு மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன மடக்குக் குச்சி மற்றும் பிரைலி கடிகாரத்தை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலர் லீலாவதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கணேஷ், உதவி ஆணையர் (கலால்)மீனாட்சி, துணை ஆட்சியர் பயிற்சி விஷ்ணுபிரியா உட்பட அரசு அலுவலர்கள்கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் கொமதேக மாவட்டச் செயலர் மூர்த்தி தலைமையில் அமராவதி பாசன விவசாயிகள் ராமலிங்கம் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் வழங்கிய மனு:
விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க அமராவதி அணையில் இருந்து கரூர் மாவட்டத்தின் பழையஆயக்கட்டு பாசனப் பகுதிக்கு அண்மையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடைமடைக்கு சென்றடையும் முன்பே நிறுத்திவிட்டனர். இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான நீரை அணையில் இருந்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எடுத்துக் கொள்கிறது. ஆனால் கரூர் மாவட்டம் மட்டும் தொடர்ந்துபுறக்கணிக்கப்படுகிறது. 
எனவே கடைமடை வரை தண்ணீர் திறக்காத சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனே அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். 
குடிநீர் கேட்டு மனு: வெள்ளியணை அடுத்த வெங்கிடாபுரம் கிராமமக்கள் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், எங்கள் கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே போதிய குடிநீர் கிடைப்பதில்லை. பல கி.மீ. தூரம் நடந்தே சென்று குடிநீர் எடுத்துவருகிறோம். அந்தத் தண்ணீரும் அன்றாடத் தேவைக்கு இருப்பதில்லை. இதுதொடர்பாக தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே குடிநீர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு: கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல பகுதிகளில் அருந்ததியர் சமூகத்தினர் குடியிருக்க வீடுகள் இன்றி கூட்டுக் குடித்தனமாகவும், வாடகை வீட்டிலும் வசிக்கிறார்கள். 
இவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா இல்லை. எனவே தமிழக அரசு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு வழங்கும் இலவச வீட்டுமனைப்பட்டா  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT