கடவூர் ஒன்றியத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மத்திய அரசின் நீர் மேலாண்மைக் குழுவினர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், மழைநீர் சேகரிப்புக்கான வழிவகைகளை மேற்கொள்ளும் வகையிலும் மத்திய அரசின் சார்பில் ஜல் சக்தி அபியான் எனப்படும் நீர் மேலாண்மைத் திட்டத்தில் தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தப் பணிகளை மத்திய அரசின் நீர் மேலாண்மைக் குழுவினர் இரண்டாம் கட்டமாக கடந்த ஒருவாரமாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய அரசின் வணிகவியல் துறை துணைச் செயலர் வெங்கடாஜலபதி தலைமையிலான இக்குழுவினர் திங்கள்கிழமை கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீரைக் சேமிப்பதற்கும் நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்அடிப்படையில் கடவூர் ஊராட்சி ஒன்றியம் வாழ்வார்மங்கலம் ஊராட்சியில் ரூ. 8,300 மதிப்பில் பயனாளி ஒருவரின் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிநபர் உறிஞ்சு குழியையும், ரூ. 19,000 மதிப்பீட்டில் தூர்ந்து போன கிணற்றை சீரமைத்து நல்முறையில் பராமரிக்க மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதேபோல கடவூர் ஊராட்சியில் அய்யம்பாளையம் வாரியில் ரூ. 9.60 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, சேவாப்பூர் வாரியில் ரூ.1.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிகழ்வுகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் மா. பரமேஸ்வரன், உதவிப் பொறியாளர் கிருஷ்ணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.