கரூர்

வழக்குகளில் காரணமின்றி வாய்தா வழங்கக் கூடாது: உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா பேச்சு

11th Aug 2019 04:32 AM

ADVERTISEMENT

வழக்குகளை உரிய காரணங்கள் இருந்தாலன்றி, வாய்தா வழங்குவதை தவிர்த்து விரைந்து முடிக்க வேண்டும் என்றார் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி டி.ராஜா.    
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் புதிய உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை, கரூர் மாவட்டத்திற்கான நிர்வாக நீதிபதியும், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியுமான டி.ராஜா சனிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது:
அரவக்குறிச்சியில் புதிய உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும். 1990ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து கரூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே, அரவக்குறிச்சிக்கு தனி நீதிமன்றம் தேவை என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அந்த நீண்டநாள் கோரிக்கையினை தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் தற்போது நிறைவேற்றியுள்ளது.
இந்த நீதிமன்றம் இப்பகுதியில் அமைவதால், வழக்குரைஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும், வழக்கு விசாரணைகளுக்காக கரூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்திற்கும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கும் சென்று வரும் நேரம் இனி மிச்சமாகும். நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவில் முடிக்க வாய்ப்பாக இருக்கும்.   கரூரில் உள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்து 281 சிவில் வழக்குகளும், கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து 207 சிவில் வழக்குகளும் என மொத்தம் 488 வழக்குகளும், நடுவர் நீதிமன்றத்தில் இருந்து 593 குற்றவியல் வழக்குகளும், இந்த புதிய நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகின்றது. 
மேலும், நீதிபதி சசிகலா கரூர் நீதிமன்றத்தில் இருந்து, அரவக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்ட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை உரிய காரணங்கள் இருந்தாலன்றி, வாய்தா வழங்குவதை தவிர்த்து விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
கட்டடம் அமைக்க நடவடிக்கை: நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில், புதிய நீதிமன்றத்திற்கு பிரதான சாலை அமைந்துள்ள பகுதியில் சொந்த கட்டடம் அமைக்கப்படுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் முடிவடைந்தவுடன், முதல்வர், துணைமுதல்வர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டுசென்று, நீதிமன்றத்திற்கு சொந்தக்கட்டடம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவிற்கு கரூர் மாவட்டத்திற்கான நிர்வாக நீதிபதியான, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சி.சரவணன், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி எம்.கிறிஸ்டோபர் வரவேற்றார். தலைமை குற்றவியல் நீதிபதி பி.சி.கோபிநாத் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ம.கீதா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் மாரப்பன், வழக்குரைஞர் சங்கத்தலைவர் சீனிவாசன், பார்கவுன்சில் உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT