அரியலூர்

ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை

29th Sep 2023 11:28 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விற்பனையைத் தொடக்கிவைத்து ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தது: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் தீபாவளிக்கு தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன்படி நிகழாண்டும் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது. கடந்தாண்டு நிா்ணயித்த இலக்கைவிட ரூ. 22 லட்சத்துக்கு விற்பனையானது.

அதேபோல நிகழாண்டு ரூ.55 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நிகழாண்டு, புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூரைப் புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்திச் சேலைகள், லினன் புடவைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, கைலி, துண்டு ரகங்கள், பருத்திச் சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் வந்துள்ளன. எனவே பொதுமக்கள் இவற்றை வாங்கி கைத்தறி நெசவாளா்களுக்கு தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும்.

மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மாதாந்திரச் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 11 மாத சந்தாத் தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 ஆவது மாத சந்தாவை நிறுவனமே செலுத்தி, மொத்த முதிா்வு தொகைக்கு தேவைப்படும் துணிகள் 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ப. அம்சவேணி, மேலாளரும், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கூடுதல் பொறுப்பாளருமான அய்யப்பன் மற்றும் அரசு அலுவலா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT