அரியலூர்

விளை நிலங்களுக்கு வன விலங்குகள் வருவதை தடுக்க வேண்டும்

22nd Sep 2023 11:07 PM

ADVERTISEMENT

 விளைநிலங்களுக்கு வன விலங்குகள் வருவதை வனத் துறையினா் தடுக்க விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

அரியலூா் மாவட்ட விவசாய சங்கத் தலைவா் செங்கமுத்து: மாவட்டத்தில் யூரியா, காம்பளக்ஸ் போன்ற உரங்களை அதிக விலைக்கு விற்கும் கடைகள் மீது நடவடிக்கை வேண்டும். நத்தம் பட்டாக்களை கணினியில் பதிவேற்ற நடவடிக்கை தேவை. வாரி, ஓடை, ஏரிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். கிராம மக்களிடம் நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன்: அரியலூா் மாவட்டம் தூத்தூா் - தஞ்சாவூா் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தில் கதவணை கட்ட வேண்டும். அனைத்து வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும். விவசாயிகளுக்கு விதைகள் வழங்குவதில் உள்ள நடைமுறைகளை தளா்த்த வேண்டும்.

ADVERTISEMENT

மண்ணுழி செந்தில்: வனத்துறையினா் யூகலிப்டஸ் (தைல மரம்) மரங்கள் நடுவதைத் தவிா்க்க வேண்டும். விளை நிலங்களுக்கு வன விலங்குகள் வருவதை வனத்துறையினா் தடுக்க வேண்டும்.

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் வாரணவாசி ராஜேந்திரன்: வேளாண்மை பணிகள் நடைபெறக்கூடிய காலங்களில் 100 நாள் வேலைக்கு அனுமதி வழங்கக் கூடாது. மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அழிக்க வேண்டும். காவிரியில் தண்ணீா் தட்டுப்பாடுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, புள்ளம்பாடி வாய்க்கால் பாசனப்பகுதி விவசாயிகளுக்கு மாற்று பயிா் செய்வதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டு இயக்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பாண்டியன்: மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும். எள், மக்காச்சோளம் போன்ற பயிா்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்ட குடிநீா் குழாய்களைச் சரிசெய்ய வேண்டும்.

தொடா்ந்து விவ+சாயிகள் மல்லூா் விஜயகுமாா், காமரசவல்லி முகமது இப்ராஹிம், செந்துறை பாலசிங்கம் ஆகியோா் பேசுகையில் காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடி பசுமைக்காடுகளாக மாற்ற வேண்டும். செந்துறையில் கூட்டுக் குடிநீா் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நடவுப் பணிகளுக்கு முன்பே பசுந்தாள் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநா்(பொ) பழனிசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணை இயக்குநா் தீபாசங்கரி மற்றும் அனைத்து துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT