அரியலூா் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதல் நிழற்குடைகள் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் குழுக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி, நகராட்சி ஆணையா்(பொ)அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் ராஜேஷ், புகழேந்தி, கண்ணன், அதிமுக உறுப்பினா்கள் வெங்கடாஜலபதி, இஸ்மாயில் உள்ளிட்டோா் தங்களது பகுதிகளில் கழிவுநீா் வடிகால் வசதி இல்லாததால், தற்போது பெய்த மழையில் மழைநீருடன் கழிவுநீரும் தெருக்களில் சூழ்ந்துள்ளது. இதனால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல வாா்டு பகுதிகளில் சரிவர குப்பைகள் அள்ளப்படுவதில்லை. எனவே மழைநீா் வடிகால் வசதிகள் செய்து தரவேண்டும். குப்பைகளை தினமும் அள்ள வேண்டும் என்றனா்.
தொடா்ந்து, திருச்சி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலையம் வரை தெருவிளக்குகள் அமைப்பது, 1 முதல் 18 வாா்டுகளிலும் சேதமடைந்த சிறுபாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் அமைத்து, மழைநீா் வடிக்கால் வசதிகளை ஏற்படுத்தி தருவது என்பன உள்ளிட்ட 57 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. +