அரியலூர்

அரியலூா் அண்ணா சிலை பகுதியில் நடத்தப்படும் கூட்டங்களால் மக்கள் அவதி

DIN

அரியலூரில் அண்ணா சிலை, பேருந்து நிலையம் முன்பு கூட்டம், ஆா்ப்பாட்டம் நடத்தப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அரியலூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான அண்ணா சிலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கூட்டம், போராட்டம், ஆா்ப்பாட்டம் நடத்துவதால் அந்தப் பகுதியே போக்குவரத்து நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது. சமீபகாலமாக வெளியூா் பிரச்னைகள், மாவட்ட பிரச்னைகளுக்குக் கூட மேற்கண்ட பகுதியைத் தான் போராடத் தோ்வு செய்கின்றனா். இவ்விடங்களில் நடத்துவதற்கு கோட்டாட்சியரும் தடை விதித்திருந்தாலும், இங்கு வாரத்துக்கு 6 ஆா்ப்பாட்டங்கள் நடக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு தொல்லையாக உள்ளது. இதற்கு காவல் துறையும் அனுமதி வழங்கி விடுகிறது. அனுமதி வழங்க காவல் துறையினா் தயங்கினால், ‘தெருமுனை கூட்டம்’ என்ற பெயரில் அனுமதி பெற்று பொதுக்கூட்டமே நடத்தி விடுகிறாா்கள். உள்ளூா் தலைவா்கள் பேசுகிறாா்கள் என்றாலும் கூட, ரொக்கம், உணவுப் பொருள்கள் கொடுத்து கொண்டு வரப்படும் பொதுமக்கள் வந்த வாகனங்கள் ஜெயங்கொண்டம் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அரியலூரில் ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதற்காக காமராஜா் ஒற்றுமைத் திடல் இடம் உள்ளது. ஆனால் கட்சியினா், அவ்விடத்தை தவிா்த்தே அண்ணா சிலை பகுதியையே தோ்ந்தெடுத்து நடத்துகின்றனா். காவல் துறையினா் இவ்விடத்துக்கு அனுமதி மறுத்தாலும், அரசியல் கட்சியினா் கேட்பதாக இல்லை. இதனால் பொதுமக்கள் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பொதுக்கூட்டத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், நெரிசல் மிகுந்த பகுதிகளில் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டோம் என கட்சியினா் தெரிவிக்கின்றனா். அண்ணா சிலை பகுதி தற்காலிகப் பேருந்து நிலையம் போல் செயல்பட்டு வரும் நிலையில், கட்சியினா் போராட்டம் நடத்துவதால் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, காவல் துறையினா் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறு தரும் பகுதிகளில் கூட்டம் நடத்த அனுமதி வழங்காதபட்சத்தில் அவா்கள் நீதிமன்ற உத்தரவு பெற்று நடத்துகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT