விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிமாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏதுவான தரமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவு ஆகியவற்றுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
வரும், மே 24-இல், அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விடுதிகளில் சேரவிரும்பும் ஆா்வமுள்ள விளையாட்டு வீரா்களுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
மாணவா்களுக்குத் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது.
மாணவியருக்கு, தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், ஹாக்கி, டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, டென்னிஸ், ஜீடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதுாக்குதல், மேஜைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சோ்க்கை நடக்கிறது.
விளையாட்டில் ஆா்வமுள்ள மாணவ, மாணவியா், வரும், 23 ஆம் தேதி மாலை, 5 மணி வரை, இணையதள முவரியில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 95140 00777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். அரியலூா் மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள், 24 ஆம் தேதி காலை 7 மணியளவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.