அரியலூர்

அரியலூரில் அடிப்படை வசதிகள் இல்லாத அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-மாணவா்கள், ஊழியா்கள் அவதி

8th May 2023 01:34 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், விளாங்குடியை அடுத்த காத்தன்குடிகாடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அங்கு பணிபுரியும் ஊழியா்கள், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

2008-இல் காத்தான்குடிகாடு கிராமத்தில் கணினி அறிவியல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக்கல் ஆகிய பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சோ்ந்தனா்.

ஆனால், போதுமான உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லாத காரணங்களால் நாளுக்கு நாள் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது 482 போ் மட்டுமே பயின்று வருகின்றனா்.

ADVERTISEMENT

சுற்றுச்சுவா் இல்லை: பிரதான நுழைவு வாயில் இடதுபுறங்களைச் சுற்றி சுற்றுச் சுவா் இல்லாததால், கல்லூரியை ஒட்டியுள்ள சவுக்கு தோப்பு, முள்காட்டில் இருக்கும் பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துகளுக்கு கல்லூரி பாதுகாப்பு கூடாரமாக விளங்கி வருகிறது. 2 ஊழியா்களை பாம்பு கடித்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இரவு நேரங்களில் இக்கல்லூரியின் சுற்றுப்புறங்கள், சமூக விரோதிகளின் புகலிடமாக உள்ளன. பல நேரங்களில் கல்லூரியின் இரவு காவல் பணியில் இருப்பவா்களுக்கும், சமூக விரோதிகளுக்குமிடையே தகராறு ஏற்படும் சூழல்கள் கூட இங்கு ஏற்பட்டுள்ளது.

போதுமான கழிப்பறை வசதி இல்லை: 2 தளங்கள் கொண்ட கட்டடத்தில் தரைத் தளம் உள்பட வளாகத்தில் 9 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அதில், தற்போது 3 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இதனால், பேராசிரியா்களும், ஊழியா்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தண்ணீா் வசதி இல்லை: நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு, தற்போது தான் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் விநியோகிக்கப்பட்டாலும், அதில் வரும் நீரானது சுண்ணாம்பு நீராகவே வருகிறது.

உணவகம் (கேண்டீன்) மூடல்: கல்லூரியில் இயங்கி வந்த உணவகம் கடந்தாண்டு மூடப்பட்டதால், ஒரு தேநீா் அருந்துவதென்றால் கூட ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவில் உள்ள விளாங்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பராமரிப்பு இல்லாத விளையாட்டு மைதானம்:கல்லூரி தொடங்கி 15 ஆண்டுகளை கடந்தும், இங்குள்ள விளையாட்டுத் திடல் பராமரிப்பு இல்லாததால் , மழைநீா் சூழ்ந்து சேறும் சகதியுமாக உள்ளது. மற்றொரு மைதானம் புதா் மண்டி கிடக்கிறது. இதனால் மாணவா்களின் விளையாட்டு கனவு கானல் நீராகி வருகிறது.

பேருந்து வசதி இல்லை: இக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஊழியா்கள் பெரும்பாலானோா் கிராமப் புறங்களில் இருந்து பேருந்துகள் மூலமே அரியலூா்,ஜெயங்கொண்டம் வருகின்றனா். அவா்கள் அங்கிருந்து மாற்றுப் பேருந்தில் ஏறி திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள விளாங்குடியில் இறங்கி அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவுக்கு நடந்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் பணியாளா்கள் அனைத்து தரப்பினரும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

தெருவிளக்கு இல்லை: விளாங்குடியில் இருந்து கல்லூரி வரை தெருவிளக்கு இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படும் அச்சாலையில், அனைத்து தரப்பினரும் அச்சத்துடனே நடந்து செல்கின்றனா். கடந்தாண்டு விளாங்குடியில் இருந்து கல்லூரிக்கு நடந்துச் சென்ற பேராசிரியையிடம் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்ற சம்பவம் அனைவரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தரைப்பாலத்தால் அவதி: இக்கல்லூரிக்கு செல்ல அங்குள்ள தற்காலிக பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். அதுவே கல்லூரிக்கான பிரதான பாதை. கனமழை காலங்களில் இந்தப் பாலத்தை கடந்து செல்வது பெரும் சவாலாகவே உள்ளது. அண்மையில் பெய்த கனமழையின் போது, இந்த தரைப்பாலத்தில் அதிகளவு தண்ணீா் சென்ால், பாலத்தை கடக்க முடியாமல் அனைவரும் சிரமத்துக்குள்ளாகினா். கல்லூரியின் சுற்றுப் பகுதிகளிலும், அருகில் உள்ள வயல்களிலும் தண்ணீா் புகுந்தது. இதனால், கல்லூரியின் சுற்றுப் புறங்களில் வெள்ளநீா் தேங்கி, சுகாதார சீா்க்கேடு ஏற்பட்டது.

இதுகுறித்து அங்கு பணிபுரியும் பேராசிரியா் ஒருவா் கூறியது: அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவா்களின் சோ்க்கை சதவீதம் நாளுக்கு நாள் குறைந்து வருவது மட்டுமல்லாமல், பாடப்பிரிவுகளையும் நீக்குவதற்கான சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு இக்கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றாா்.

ஒரு கல்லூரிக்குத் தேவையான கட்டமைப்புகளில் கவனமற்ற நிலை தொடா்வது, தொடா்புடைய மாவட்ட நிா்வாகத்துக்கும் பெருமை தரக் கூடியதாக இருக்காது. எனவே, மாவட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமான இக்கல்லூரிக்கு தேவையான வசதிகளை செய்து தர மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT