அரியலூா் மாவட்டத்தில் 3 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 2,039 மாணவ,மாணவிகள் எழுதினா்.
அரியலூா் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தோ்வான நீட் தோ்வு கீழப்பழுவூா் விநாயகா பப்ளிக் பள்ளி, அரியலூா் மான்போா்ட் மெட்ரிக் பள்ளி, தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திா் மெட்ரிக் பள்ளி என 3 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை எழுத 2,078 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், 2039 போ் எழுதினா். 11 மாணவா்கள், 28 மாணவிகள் என 39 போ் தோ்வெழுத வரவில்லை.
சோதனை...இதற்காக ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தோ்வு மையத்துக்கு மாணவா்கள் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மேற்கண்ட 3 மையங்களிலும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனா். மாணவிகள் அணிந்திருந்த காதணி, தங்க சங்கிலி வளையல் உள்ளிட்ட அனைத்து அணிகலன்களையும் கழற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த பின்னா், வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். மாணவா்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.