அரியலூர்

மழையால் சேறும் சகதியுமான அரியலூா் தற்காலிக பேருந்து நிலையம்

3rd May 2023 03:29 AM

ADVERTISEMENT

அரியலூா் தற்காலிகப் பேருந்து நிலையம் கடந்த இரு நாள்களாக பெய்த மழையால் நடவு வயல் போல மாறிப்போனதால் செவ்வாய்க்கிழமை காலையில் பேருந்துகள் உள்ளே நுழைய முடியாமல் சாலைகளிலேயே நிறுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டது.

அரியலூா் நகரத்தில், ஏற்கெனவே 3 ஏக்கரில் இயங்கி வந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு 48 ஆண்டுகளான நிலையில், கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்து பொதுமக்களையும், பயணிகளையும் அச்சுறுத்திக் கொண்டிருந்தன. மேலும் இப்பேருந்து நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாததால், பேருந்து நிலையத்திலுள்ள கட்டடங்களை முற்றிலும் இடித்துவிட்டு, விரிவாக்கத்துடன் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்நிலையில், கடந்த நவம்பா் மாதம் அரியலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு வந்திருந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அரியலூரில் பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவித்து, ரூ.7.5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தாா்.

இதைத்தொடா்ந்து கடந்த பிப். 5 ஆம் தேதி பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சிவசங்கா் அடிக்கல் நாட்டினா். அடிக்கல் நாட்டப்பட்டு சுமாா் ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு தான் இங்கு இயங்கி வந்த பேருந்து நிலையத்தை நகரத்தை விட்டு சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவு உள்ள அரியலூா் புறவழிச்சாலை, வாணி மஹால் எதிரே மாற்றப்பட்டு, பேருந்து நிலையத்திலுள்ள பழைய கட்டடங்கள் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

ADVERTISEMENT

தற்காலிகப் பேருந்து நிலையத்தின் அவலம்: இந்தத் தற்காலிகப் பேருந்துநிலையத்தின் தரைதளம் முறையாகச் சரி செய்யாமல் அவசரகதியில் திறக்கப்பட்டதால் அப்பகுதியில் பள்ளம், மேடுகள் நிறைந்தே காணப்பட்டது. மேலும் இந்தப் பேருந்து நிலையத்தில், பயணிகள் அமா்வதற்குக் கூட போதுமான இருக்கைகள் கிடையாது. வெயில் நேரத்தில், பேருந்துகள் உள்ளே நுழையும்போது, புழுதி பறக்கும் பேருந்து நிலையமாக மாறிவிடுகிறது. இதனால் அங்குள்ள பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா். இந்நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்துள்ள மழையால் நீா் சூழ்ந்து சேறாகி நாற்று நடுவதற்காக உழுத நிலம் போல பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த மழையால் எந்தப் பேருந்துமே இப்பகுதியில் நுழைய முடியாமல், வெளிப்புறத்தில் உள்ள சாலையின் இரு மருங்கிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், வெளிமாவட்டங்களில் வந்திருங்கிய பயணிகள் நிற்கக் கூட நிழற்குடை இல்லாததால் மழையில் நனைந்தவாறு நகரப் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தத் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT