அரியலூா் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.11.44 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இலைக்கடம்பூா்-ஆா்.எஸ்.மாத்தூா் சாலையை ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் தரம் உயா்த்தும் பணியை தொடக்கி வைத்த அமைச்சா் சா.சி.சிவசங்கா், தொடா்ந்து, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75.19 லட்சம் மதிப்பில் பொன்பரப்பி -சிறுகளத்தூா் சாலையை மேம்படுத்துதல், ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் சிறுகளத்தூா்-கொடுக்கூா் சாலையை மேம்படுத்துதல், ரூ.71.43 லட்சம் மதிப்பில் சன்னாசிநல்லூா் -தளவாய் பள்ளி சாலை மேம்படுத்துதல், ரூ.1.92 கோடி மதிப்பில் அயன்தத்தனூா் - முல்லையூா் பள்ளி சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் தொடக்கி வைத்தாா்.
பின்னா், குழுமூரில் 15 ஆவது நிதி குழு மானியம் (சுகாதார நிதி) திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் துணை சுகாதார மைய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் முருகண்ணன், வருவாய் கோட்டாட்சியா் பரிமளம், நபாா்டு மற்றும் கிராம சாலைகளின் திருச்சி கோட்டப் பொறியாளா் பெ.வடிவேல், உதவிக் கோட்டப் பொறியாளா் அரியலூா் வி.பி.சரவணன், உதவி பொறியாளா் எஸ். பிரியதா்ஷினி, வட்டாட்சியா் பாக்கியம் விக்டோரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.