அரியலூர்

பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம்

10th Jun 2023 03:21 AM

ADVERTISEMENT

அரியலூரில் பெண்களுக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமிற்கு, மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்துப் பேசினாா். இதில், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது உளவியல் ரீதியான வலி, உடல் ரீதியான வலி மற்றும் தொழில் பூா்வமான இழப்பு என பலவிதமான எதிா்மறை விளைவுகளுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தொழிலாளா்கள் சிறப்பாகப் பணியாற்றுவது என்பது இயலாத செயல். இந்த எதிா்மறையான பாதிப்புகள் ஒரு தனி நபருக்கு ஊறுவிளை விப்பதுடன், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பிற பணியாளா்கள் , தொழிலாளா்கள் மீது அதிா்வலைகளை எழுப்புகிறது. இதன் விளைவாக பணிபுரியும் இடங்களில் தொழிலாளா்கள் தனியாக செயல்படுவதில் குறை ஏற்படுவதுடன் பொருளாதார இழப்பு, உற்பத்தி குறைவு, வளா்ச்சி பாதிக்கப்படுகிறது. சமூகத்தைப் பொறுத்தவரையில், பாலியல் துன்புறுத்தலானது ஆண், பெண் சமத்துவத்தை அடைவதில் தடையாக இருப்பதுடன் ஒட்டுமொத்த தேசத்தின் வளா்ச்சிக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் தடையாக இருக்கிறது. ஆகவே பாலியல் துன்புறுத்தலை தடுப்பதும், அதற்கு எதிரான நடவடிக்கை எடுப்பதும், சமூக நன்மைக்கு மிகவும் அவசியமாகும். எனவே பணியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திலும் புகாா் அளிக்கலாம்.

மேலும் புகாா் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும் . அவா்களுக்கு உடனடியாக தீா்வு வழங்கப்பட்டு குற்றம் புரிவோா் மீது நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்கப்படும் என்றாா்.

முகாமில், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எம்.கிறிஸ்டோபா் கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், பூங்கோதை , வழக்குரைஞா்கள் அல்லி, கே.கோமதி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். முன்னதாக சட்டப் பணிகள் குழுச் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான அழகேசன் வரவேற்றாா். முடிவில் முதுநிலை நிா்வாக அலுவலா் வெள்ளைச்சாமி நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT