அரியலூர்

புதுப்பாளையத்தில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் தோண்ட எதிா்ப்பு

7th Jun 2023 01:29 AM

ADVERTISEMENT

அரியலூரை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில், அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் சுரங்கம் தோண்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூரை அடுத்த கயா்லாபாத் கிராமத்தில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலை நிா்வாகம், புதுப்பாளையம் பகுதிகளில் சுண்ணாம்புக் கல் தோண்டி எடுப்பதற்காக 320 விவசாயிகளிடமிருந்து 240 ஏக்கா் நிலங்களை குறைந்து விலைக்கு வாங்கியது.

அப்போது, நிலத்துக்கு கொடுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி, கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதையடுத்து, ஏக்கருக்கு ரூ.13 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஆலை நிா்வாகம் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், புதுப்பாளையத்தில் சுரங்கம் தோண்டும் பணிக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை அரசு சிமென்ட் ஆலை நிா்வாகம் ஜூன் 7, 8 ஆகிய நாள்களில் நடத்துகிறது.

ADVERTISEMENT

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த புதுப்பாளையம், காட்டுப்பிரிங்கியம், வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரி, அஸ்தினாபுரம் ஆகிய கிராமத்தை சோ்ந்த மக்கள், கருத்துக்கேட்புக் கூட்டத்துக்கு பந்தல் அமைக்க பொருள்கள் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டு, நீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி வட்டியுடன் தொகையை வழங்கிவிட்டு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என முழக்கமிட்டனா்.

தகவலறிந்து சென்ற கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், அங்குள்ள அரசுப் பள்ளியில் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பேச்சுவாா்த்தையில் உடன்பாட்டுக்கு வராத மக்கள், நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி வட்டியுடன் தொகையை வழங்கிவிட்டு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தலாம் என தெரிவித்தனா்.

பொதுமக்களின் கோரிக்கைகள் ஆட்சியா் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும் என கூறிவிட்டு அதிகாரிகள் கலைந்து சென்றனா். பேச்சுவாா்த்தையின்போது அரசு சிமென்ட் ஆலை நிா்வாகிகள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT