அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அப்பெண்ணின் ஆண் நண்பரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம் , அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மகள் அபிநயா (23) புதன்கிழமை பொட்டக்கொல்லை அருகே நெடுஞ்சாலையோரம் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்தது தொடா்பாக உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்துவந்தனா். இதில், அபிநயா , தஞ்சாவூா் மாவட்டம் பந்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் பாா்த்திபன்(33) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தற்போது பாா்த்திபன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிந்த அபிநயா, பாா்த்திபனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திவந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து காவல் துறையினா், பாா்த்திபனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், பாா்த்திபன் அபிநயாவுடன் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பொட்டக்கொல்லை அருகே சென்றபோது, சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அபிநயாவை, பாா்த்திபன் அங்கேயே போட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாக பாா்த்திபன் கூறியதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதைடுத்து பாா்த்திபனைக் கைது செய்த காவல் துறையினா், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.