அரியலூர்

பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு 12 நாள்களில் இழப்பீடு வழங்கல்

31st Jan 2023 12:19 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில், வழக்கு தொடுத்த 12 நாள்களில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50,000 இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. மேலும், தரமற்ற பொருள்களை ஒருவாரத்துக்குள் மாற்றித் தருமாறும் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரியலூா் நகரில் வசிப்பவா் கிரி மனைவி கற்பகவள்ளி (55). இவா் கடந்த 2021-இல் ஒரு தனியாா் நிறுவனம் தயாரித்த பிளாஸ்டிக் குழாய்கள், இதர பொருள்களையும் ரூ.47,000 செலுத்தி பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கினாா். ஆனால், பிளாஸ்டிக் குழாய்கள் பொருத்தப்பட்ட 3 மாதங்களில் கசிவு, குழாய் அடைப்பு, பாசி பிடித்தல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது தொடா்பாக புகாா் தெரிவித்து பல மாதங்களாகியும் உற்பத்தியாளா், விற்பனையாளரும் பிரச்னையை சரிசெய்யாமல் அலட்சியம் காட்டி வந்தனராம். இதையடுத்து, கற்பகவள்ளி கடந்த மாதம் 14 ஆம் தேதி அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடுத்தாா். இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது. 24 ஆம் தேதி சமரச அறிக்கை மாவட்ட நுகா்வோா் ஆணையத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினமே பிளாஸ்டிக் குழாய்கள் உற்பத்தி நிறுவனத்தினா் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையாக (வரைவோலையாக) வழங்கினா்.

இதுதொடா்பாக மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமா்வு, சமரச அறிக்கையின்படி வழக்கு தொடுத்தவருக்கு ஒரு வார காலத்துக்குள் தரமான குழாய்கள், இதர பொருள்களையும் வழங்கவேண்டுமென திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT