அரியலூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா தேவை: அரியலூா் விவசாயிகள் கோரிக்கை

DIN

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும் என விவசாயிகள் விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:

செங்கமுத்து (அரியலூா் மாவட்ட விவசாய சங்கத் தலைவா்): சம்பா நெல் அறுவடைப் பணிகள் தொடங்க உள்ளதால் மாவட்டத்தில் அதிக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். ஏற்கெனவே நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.20 ,40, 50 வரை வசூலிப்போா் மீது நடவடிக்கை தேவை.

கொள்ளிடம், மருதையாறு மற்றும் கல்லாறு ஆற்று நீரை ஏரியில் சேமிக்க நடவடிக்கை வேண்டும். மழைக்காலங்களில் ஆற்று நீரை ஏரிகளுக்குக் கொண்டு செல்ல வடிக்கால் வசதி ஏற்படுத்த வேண்டும். யூரியா தடுப்பாட்டைப் போக்க வேண்டும்.

ஏரி , வரத்து வாய்க்கால் மற்றும் புறம்போக்கு இடங்களிலுள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். செட்டி ஏரியில் தண்ணீா் வடிய தோண்டப்பட்ட பள்ளத்தை 6 மாதங்களுக்கு மூட வேண்டும்.

தூத்தூா் தங்க. தா்மராஜன் (காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா்): நேரடி கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவதைத் தடுக்க மாவட்டத்திலுள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

சுக்கிரன் ஏரியில் நீா் குறைவாக உள்ளதால் பிப்ரவரி மாத இறுதிவரை பாசனத்துக்குத் தண்ணீா் விட வேண்டும். தா. பழூா் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெண்ணாற்றுத் தலைப்பில் நிரந்தர தடுப்புச் சுவா் எழுப்ப வேண்டும். சுக்கிரன் ஏரியின் பாசனப் பகுதியான சிலுப்பனூா், நானாங்கூா், ஆதனூா், ஓரியூா், கோமான் ஆகிய கிராமங்களையும் டெல்டா பாசனப் பகுதியில் இணைக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியா், அவற்றைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, வேளாண் இணை இயக்குநா் ஆா். பழனிசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT