அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து சமாதான புறாக்கள் மற்றும் மூவண்ண பலூன்களைப் பறக்கவிட்டு, காவல்துறை படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவரது வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா். அதனைத் தொடா்ந்து , சிறப்பாகப் பணிபுரிந்த காவலா்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சா் காவலா் பதக்கம் 32 காவலா்கள், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசுத் துறைகளைச் சாா்ந்த 162 அலுவலா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கினாா்.
வாரணவாசி முன்மாதிரி கிராமம்:
அரியலூா் மாவட்டத்தில் 2021 - 22 ஆம் ஆண்டில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக வாரணவாசி கிராம ஊராட்சிக்கு முன் மாதிரி கிராம விருதும், ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையையும் வழங்கினாா்.
மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் 46 பயனாளிகளுக்கு ரூ.17.21 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.கலைவாணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.ஈஸ்வரன் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, இனிப்புகள் வழங்கினாா். தொடா்ந்து சிறப்பாகப் பணியாற்றிய தூய்மை காவலா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா்.
பள்ளி, கல்லூரிகளில்...
அயன் ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய உயா்நிலைப் பள்ளி, லிங்கத்தடி மேடு வள்ளலாா் கல்வி நிலையங்கள், அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி ஆகிய அரசு, தனியாா் கல்வி நிலையங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.