குடியரசு தினத்தையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டிமடம் அடுத்த திருகளப்பூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தலைமை வதித்தாா். கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு கூட்டப்பொருள்கள் விவாதிக்கப்பட்டன. முன்னதாக, ஆட்சியா் தலைமையில், வாக்காளா் தின விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.ஈஸ்வரன், வேளாண்மை இணை இயக்குநா் பழனிசாமி, கோட்டாட்சியா் பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலா் ராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல் அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.