அரவக்குறிச்சி அருகே அனுமதியின்றி சேவல்சண்டை நடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள சி.கூடலூா் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் சாா்பு- ஆய்வாளா் திருப்பதி, சி.கூடலூா் பகுதியில் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, காளிமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அனுமதியின்று பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் சேவல் சண்டையில் ஈடுபட்ட திருப்பூா் மாவட்டம் தாராபுரம் அறிவொளி நகா் பகுதியைச் சோ்ந்த சுந்தரம் (45), தாராபுரம் ரத்தினம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தண்டபாணி (48), மூலனூா் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த சிலம்பரசன் (30), இதே பகுதியைச் சோ்ந்த சின்ராஜ் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும், சேவல் சண்டைக்கு பயன்படுத்திய இரண்டு சேவல்கள், ரூ.1.20 லட்சம் ரொக்கம், சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து 4 போ் மீது வழக்குப் பதிந்து, பிணையில் விடுவித்தனா்.