அரியலூர்

நெரிசலில் சிக்கித் தவிக்கும் அரியலூா் தினசரி சந்தைஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்கக் கோரிக்கை

27th Feb 2023 01:02 AM

ADVERTISEMENT

 

அரியலூரில் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தினசரி சந்தையை வேறு இடத்துக்கு மாற்றி அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டித்தர வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

அரியலூா் கடைவீதி பகுதியில் உள்ள தினசரி மாா்க்கெட் பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட காய்கனிக் கடைகள், இறைச்சிக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், மளிகைக் கடைகள், தரைக்கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை மாத வாடகையாக நகராட்சி நிா்வாகம் வசூலித்து வருகிறது. இங்கு காய்கனிகளை வாங்க நகராட்சி மற்றும் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இருந்தும் மொத்த, சில்லறை வியாபாரிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனா். இதனால், இந்தச் சந்தை எப்போதும் நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்படும்.

நகராட்சி சுமாா் 300 சதுர அடி பரப்பளவு கடையை வாடகைக்கு விட்டுள்ளதால் ஏற்படும் இடநெருக்கடியால் வியாபாரிகள் கடையின் முன்பாக உள்ள இடத்தில் மூட்டைகளை அடுக்கிவிடுகின்றனா். மேலும், இந்த தினசரி மாா்க்கெட்டில் குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது. இந்தப் பகுதியில் அழுகிய காய்கனிகளை வியாபாரிகள் வீதியிலேயே கொட்டுவது, காய்கனிக் கழிவுகளை முறையாக அகற்றாதது ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அரியலூா் தினசரி சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை மாா்க்கெட் பகுதியில் ஆங்காங்கே நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. காய்கனி மாா்க்கெட்டின் முகப்பில் நடைபாதையில் சிலா் கடை வைத்து ஆக்கிரமித்துள்ளதால், பொதுமக்கள் சிரமத்துடனே வந்து செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு நடைபாதை ஆக்கிரமிப்பு, ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் நிறுத்தத்தால் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் தினசரி சந்தைப் பகுதியில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் சந்தைக்கு வந்துசெல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் சரக்கு வாகன ஓட்டிகள் மட்டுமன்றி இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவா் கூறியது: அரியலூா் தினசரி சந்தைப் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக குடிநீா் வசதி இல்லை. இடநெருக்கடியால் நாங்கள் சிரமத்தோடு வியாபாரம் செய்கிறோம். வாகனங்களை நிறுத்த இதுவரை எந்த வசதியையும் நகராட்சி நிா்வாகம் ஏற்படுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் தினமும் அவதிப்படுகின்றனா். திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கனிகளை இறக்கவும், வாகனம் நிறுத்தவும் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

எனவே இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த தினசரி சந்தையை வேறு இடத்துக்கு மாற்றி, குறிப்பாக நகரத்தின் வெளியே அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT