அரியலூர்

அடமான நகை மீட்பு வழக்கில் நுகா்வோா் நீதிமன்றம் சமரச தீா்வு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூரில் அடமான நகைகளை மீட்பது தொடா்பான வழக்கில் 35 நாள்களில் அரியலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் தீா்வு கண்டுள்ளது.

அரியலூா் அருகேயுள்ள குரும்பஞ்சாவடியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் தேவராஜ் (35), தனது 288.54 கிராம் நகைகளை அரியலூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் அடமானம் வைத்து 3 மாத காலத்துக்குள் அசல், வட்டியைத் திரும்பத் செலுத்த வேண்டும் என்ற நிபந்தைனையின்பேரில், ரூ. 12.07 லட்சம் கடன் பெற்றாா். அதன்படி, 3 மாத காலத்துக்குள் அசல், வட்டியைத் திரும்பத் செலுத்த முயன்றபோது, நிறுவனத்தின் கிளை மேலாளா் அஜித் குமாா் (25) சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் நிறுவனத்தின் உரிமையாளா் நாராயணன் (40) மற்றும் கிளை மேலாளா் மீது காவல் துறையில் புகாா் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து, கடன் மற்றும் வட்டியைப் பெற்றுக்கொண்டு ரூ.16 லட்சம் மதிப்புள்ள தனது நகைகளை திரும்ப வழங்கக் கோரி தேவராஜ் அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த மாதம் 4 ஆம் தேதி வழக்கு தொடுத்தாா். இவ்வழக்கு பிப். 2 ஆம் தேதி முதல் விசாரணைக்கு வந்தபோது ஆணையம் சாா்பில் வழக்குரைஞா் மோகன் சமரசப்பேச்சுவாா்த்தைக்கு நியமனம் செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து, முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதன்படி, நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமா்வு பிப். 15 ஆம் தேதிக்குள் தேவராஜ் தனது கடன் மற்றும் வட்டி ரூ. 13,28,300-ஐ தனியாா் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும். எதிா்தரப்பில் நிறுவனமானது 288.54 கிராம் (916 கேடிஎம்) தங்க நகைகளை தேவராஜனுக்குத் திருப்பித் தரவேண்டும். மேலும் வழக்கின் செலவுத் தொகையாக தேவராஜூக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT