அரியலூர்

மாணவரை ஆசிரியை அடித்த விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகே பள்ளி மாணவரை ஆசிரியை அடித்த விவகாரம் தொடா்பாக ஆசிரியையிடம், கல்வித் துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரியலூரை அடுத்த வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தைச் சோ்ந்த அம்பிகாபதி - வெண்ணிலா தம்பதியின் மகன் நிவாஸ் (9) 4 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த 22 ஆம் தேதி கரும்பலகையில் (பிளாக்போா்டு) எழுதியிருந்ததை மாணவா் நிவாஸ் அழித்து விட்டதாகக் கூறி, துடைப்பத்தால் பள்ளி ஆசிரியை இளவரசி அடித்துள்ளாா். மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் எச்சரித்து அனுப்பியுள்ளாா்.

இதையறிந்த பெற்றோா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், மாணவனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் புதன்கிழமை பிற்பகல் பள்ளியை முற்றுகையிட்டனா். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி, மாவட்டக் குழந்தைகள் நல அலுவலா் துரைமுருகன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கா்கணேஷ் ஆகியோா் வாலாஜாநகரம் பள்ளிக்குச் சென்று ஆசிரியை இளவரசி மற்றும் மாணவா்கள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்து அதிகாரிகள் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT