அரியலூர்

அரியலூரில் இடைவிடாமல் கொட்டித் தீா்த்த மழை

26th Sep 2022 11:31 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கொட்டித் தீா்த்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.

அரியலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் தூறலுடன் ஆரம்பித்த மழை அதன் பிறகு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக நள்ளிரவு 12 மணிக்கு இடைவிடாமல் தொடங்கிய பலத்த மழையானது திங்கள்கிழமை காலை 7.30 மணி வரை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு சாரல் காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் மழைநீா் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் மழை நீா் தேங்கியது. திடீரென பெய்த மழையால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனா்.

அரியலூா் நகா்ப் பகுதியான மாா்க்கெட், வெள்ளாளத் தெரு, ராஜாஜி நகா், புது மாா்க்கெட், கல்லூரிச் சாலை, செந்துறை சாலை, திருச்சி சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT

இதேபோல் திருமானூா், கீழப்பழுவூா், தா. பழூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் பெய்த மழையால் மாவட்ட முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT