அரியலூர்

அரியலூா் மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

20th Sep 2022 01:30 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தி துறை அரசு கூடுதல் தலைமைச் செயலருமான ரமேஷ்சந்த் மீனா திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியலூா் நகராட்சியில் நடைபெற்று வரும் பூங்கா அமைக்கும் பணி, பள்ளேரி மேம்பாட்டுப் பணி, வாரச் சந்தை வளாகத்தில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம், நாகமங்கலம் ஊராட்சியில் தூா் வாரப்பட்டு வரும் பாப்பான்குளம் பணி, ரூ.37.91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி அறிவியல் ஆய்வகம் மற்றும் நூலகம், செந்துறை அடுத்த நெய்வனத்தில் 15.42 ஏக்கரில் செயல்படுத்தப்பட உள்ள தரிசு நிலத் தொகுப்பு திட்டம் ஆகிய திட்டங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முன்னதாக வாலாஜாநகரம், நடுத்தெருவில் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள், ஸ்பிரேயா், தாா்ப்பாய், வேளாண் இடுபொருள்கள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தாா்.

அரியலூா் நகராட்சி, செந்துறை சாலை இருசுக்குட்டை குடியிருப்பு பகுதியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் ஒரு நோயாளிக்கு அவரது இல்லத்திலேயே பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படுவதையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் கலந்து கொண்டு, பல்வேறு திட்டங்களின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின் போது, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி , மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், வேளாண் இணை இயக்குநா் பழனிச்சாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராமகிருஷ்ணன், பரிமளம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT