அரியலூர்

கங்கைகொண்டசோழபுரம் அருகே மாளிகைமேடு அகழாய்வு நிறைவு

1st Oct 2022 04:34 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றன.

கங்கைகொண்டசோழபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த ராசேந்திரச்சோழன், மாளிகைமேடு பகுதியில் அரண்மனைக் கட்டி வாழ்ந்து வந்தாா்.

ராஜேந்திரச்சோழன் ஆட்சிக்குப் பின்னா் மாளிகைமேடு மண்மேடுகளால் மூடப்பட்டு காணாமல் போனது. அதன் பின்னா் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னா் 1986 - 1996 வரை 4 கட்டங்களாக இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது, மாளிகையின் செங்கற்களாலான சுற்றுச்சுவா்களும், மேலும் பல்வேறு அரிய பொருள்களும் கிடைத்தன.

அதன் பிறகு 2 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. மாளிகைமேடு பகுதியில் ஏற்கெனவே ஆராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் அருகே 15 மீ. தூரத்தில் 10 -க்கு 10 அளவிலான குழிகள் தோண்டப்பட்டு சுமாா் 50 பணியாளா்கள் கொக்கி, களை வெட்டிகளால் பாதுகாப்பான முறையில் தோண்டி பழைமையான பொருள்கள் உள்ளனவா எனத் தேடினா்.

ADVERTISEMENT

அதில் சோழா் காலத்திய அரண்மனையில் எஞ்சிய செங்கற்களால் ஆன இரண்டடுக்கு சுவா்கள் கொண்ட பகுதிகள் கண்டறியப்பட்டன.

மேலும் தங்கத்திலான காப்பு, மனித உருவம் கொண்ட பொருள், நாணயங்கள், இரும்பாணிகள், சீன மண்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், செம்புப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கிடைத்தன. இந்த அகழாய்வுப் பணியானது வெள்ளிக்கிழமை முடிந்ததையடுத்து பணி நிறுத்தப்பட்டன.

மேலும், இங்கு கண்டறியப்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. அகழாய்வின்போது கிடைத்த பொருள்கள் அனைத்தையும் பொதுமக்கள் பாா்வைக்கு வைத்தால் சிறப்பாக இருக்கும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT