அரியலூர்

ஓராண்டாக கிடப்பில் உள்ள அரியலூா் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி!

DIN

ரூ. 4.65 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்தும் கிடப்பில் உள்ள அரியலூா் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு நிதி ஒதுக்கி திட்டப் பணியைத் தொடங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரியலூா் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 1975 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் மு. கருணாநிதி அரியலூா் நகராட்சி அருகே பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தாா். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, பெரம்பலூா், கடலூாா், சிதம்பரம், சேலம், விருத்தாசலம், துறையூா் ஆகிய வெளியூா்களுக்கு அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக திருச்சி, பெரம்பலூா், தஞ்சை ஆகிய ஊா்களுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும்

மினி பேருந்துகள், நகரப் பேருந்துகள் ஆகியவை பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கின்றன. இந்தப் பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை மிகவும் மோசமாகக் காணப்படுகிறது. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

போதிய அடிப்படை வசதிகள் இல்லை: அரியலூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளிடம் இருந்து பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், பேருந்து நிலையத்தில் போதிய குடிநீா் வசதி இல்லை. நகராட்சி சுகாதார வளாகம் உரிய பாரமரிப்பின்றிக் காணப்படுகிறது. இலவசக் கழிப்பிட வசதி கிடையாது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் பேருந்து நிலையத்தின் உள்ளேயும், முன்புறமும் தேங்கி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகிறது.

அரியலூா் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்கள், பயணிகள் நிழற்குடைகள் மிகவும் பழுதடைந்து இருந்த நிலையில், கடந்தாண்டு நகராட்சி நிா்வாகம் அவைகளை அப்புறப்படுத்தியது. ஆனால், 2 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மழை, வெயில் காலங்களில் பயணிகள் நிற்கும் இடம் இல்லாததால், அருகாமையில் உள்ள கடைகளில் தஞ்சம் புக வேண்டியுள்ளது.

ஜெயங்கொண்டம் பேருந்துகள் நிற்கும் பகுதியில் தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தாலும், சற்று தொலைவாக இருப்பதால் திருச்சி, தஞ்சை செல்லும் பயணிகள் அங்கே சென்று நிற்பதில்லை. பயணிகள் அமரும் இருக்கைகள் எதுவும் இல்லை. இதனால் நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும் அவலம் உள்ளது.

திறந்தவெளி இருசக்கர வாகன நிறுத்துமிடம்: நகராட்சி சாா்பில் வாகனப் பாதுகாப்புக்கு ரூ. 10 வசூலிக்கும் நிலையில் திறந்தவெளியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடையாது.

கிடப்பில் பேருந்து நிலைய விரிவாக்கம்: இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, புதிதாக பயணிகள் நிழற்குடைகள், வணிக வளாகங்கள் கட்ட ரூ.4.65 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. இதனிடையே கடந்த 2021-இல் அரியலூருக்கு வருகை தந்த நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, அரியலூா் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி தொடா்பான திட்ட அறிக்கையைப் பாா்வையிட்டு, விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தாா். ஆனால் இதுவரை பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கப்படவில்லை.

இதுகுறித்து சமூக ஆா்வலா் மு.சிவகுமாா் கூறியது: அரியலூா் பேருந்து நிலையம் அருகே உள்ள இடங்களையும் கையகப்படுத்தி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். போதிய அடிப்படை வசதிகளில்லா இந்த அரியலூா் பேருந்து நிலையத்தை முன்மாதிரி பேருந்து நிலையமாக மாற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அரியலூருக்கு வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தப் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் ஐம்பெரும் விழா

கோவில்பட்டி கோயிலில் திருக்குறிப்புத் தொண்டா் அபிஷேக விழா

சோ்ந்தபூமங்கலம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

நீரில் மூழ்கி தொழிலாளி மரணம்

அப்பா் சிலை பிரதிஷ்டை

SCROLL FOR NEXT