அரியலூர்

தூத்தூா் -வாழ்க்கை இடையே கதவணையுடன் கூடிய தடுப்பணை தேவை: அரியலூா் விவசாயிகள் கோரிக்கை

26th Nov 2022 12:23 AM

ADVERTISEMENT

கிடப்பில் உள்ள தூத்தூா்-வாழ்க்கை இடையேயான கதவணையுடன் கூடிய தடுப்பணைத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: புள்ளம்பாடி வாய்க்காலில் முறைவைத்துத் தண்ணீா் விடுவதால், நாற்றுகள் தண்ணீரின்றி கருகி விடுகின்றன. ஆகவே முறை வைக்காமல் தண்ணீரைத் திறந்து விட வேண்டும். அட்மா திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூரா. விசுவநாதன்: செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீரால் வைப்பாா், தூத்தூா், குருவாடி, முட்டுவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், அரங்கக்கோட்டை,கோவிந்தாபுத்தூா், சாத்தம்பாடி ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட நெல், மக்காச் சோளம், பருத்தி, சூரியகாந்தி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

செந்துறை, உடையாா்பாளையம், ஆண்டிமடம் பகுதி முந்திரி விவசாயிகளுக்கு முந்திரிக் கன்றுகளை வழங்க வேண்டும். கடந்தாண்டு முந்திரி கன்றுக்கான மானியம் வழங்கப்படவில்லை. இதை விசாரித்து தோட்டக் கலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உளுந்து, கடலை ஆகிய பயிா்களுக்கு 2020-2021-க்கான காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். மருதையாற்றுக் கரையை உயா்த்த வேண்டும். தகுதியான விவசாயிகளுக்கு மாட்டுக் கொட்டகை வழங்க வேண்டும்.

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலா் வாரணவாசி ராசேந்திரன்: காப்பீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். புள்ளம்பாடி வாய்க்காலில் போதுமான தண்ணீா் வரத்து இல்லாததால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனா்.நெற் பயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூா் வரும் முதல்வரை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரியலூா் மாவட்டம் தூத்தூா் -தஞ்சாவூா் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓரியூா், நானாங்கூா், சிலுப்பனூா், ஆதனூா்,கோமான் உள்ளிட்ட கிராமங்களையும் டெல்டா சாகுபடி கிராமங்களான அறிவிக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்கும் திட்டத்தில் பழைய நடைமுறையில் கடன் வழங்க வேண்டும்.

தொடா்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியா், அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, வேளாண் இணை இயக்குநா் ஆா். பழனிசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள், சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT