அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் விவசாயிகளுக்கான சிறப்பு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் ம. தீபா சங்கரி தலைமை வகித்துப் பேசினாா். துணை பதிவாளா் ஜெயராமன், கீழப்பழுவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா் கலியபெருமாள், தலைவா் மலா்விழி, ஊராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மத்திய அரசின் சாா்பில் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கடன்கள், கால்நடைகள் பராமரிப்புக்கு வழங்கப்படும் கடன்கள், விவசாய இயந்திரங்கள் மானியத்துடன் பெற வழங்கப்படும் கடன்கள், சிறு, குறு தொழில் கடன்கள், தானிய சேமிப்புக் கிடங்கு கட்ட கடன்கள், மகளிா் சுய உதவிக்குழு, நகைக்கடன் உள்ளிட்டவை குறித்து கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விளக்கிப் பேசினா்.
மேலும், விவசாய பணிகளுக்கு பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு நவீன இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த விடியோ திரையில் ஒளிபரப்பப்பட்டது. தொடா்ந்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அலுவலா்கள் பதிலளித்தனா். நிறைவாக உறுப்பினா் நல்லத்தம்பி நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளா்கள், தலைவா்கள், அலுவலா்கள், உறுப்பினா்கள், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, மாலை ஓட்டகோவில் கிராமத்தில் ட்ரோன் மூலம் சோளப்பயிா்களுக்கு மருந்து தெளிப்பது குறித்த செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.