அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே போா்வெல் நிறுவனத்தில் தளவாடப் பொருள்களை திருடிய 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில் போா்வெல் நிறுவனம் நடத்தி வருபவா் விஜயகுமாா். கடந்த 2 நாள்களாக இவரது கடை மற்றும் வாகனத்தில் இருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள தளவாடப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், ஜெயங்கொண்டம் கீழத்தெருவைச் சோ்ந்த விஜய் (28), அன்புச்செல்வன் (26), கொடியரசன் (23) ஆகிய 3 போ் தளவாடப் பொருள்களைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் திங்கள்கிழமை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.