அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியெம்பெருமானுக்கு மஞ்தள், சந்தனம், விபூதி, மாவு, திரவியப் பொடிகள், தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நந்தியெம்பெருமாளையும், வைத்தியநாதசுவாமியையும் வழிபட்டனா்.
இதுபோல், அரியலூா் ஆலந்துறையாா், குறிஞ்சேரி காசி விசுவநாதா், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீசுவரா், கீழப்பழுவூா் அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையாா், பெரியமறை வேதநாயகி உடனுறை வேதபுரீசுவரா், காமரசவல்லி பாலாம்பிகை உடனுறை காா்கோடேசுவரா், திருமானூா் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதா், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதா், செந்துறை பெரியநாயகி உடனுறை சிவதாண்டேசுவரா் போன்ற சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
உடையாா்பாளையம், ஜயங்கொண்டம், விக்கிரமங்கலம், சுத்தமல்லி, பொன்பரப்பி, ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூா் பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.