அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த அசாவீரன்குடிகாடு கிராமத்தில் வேளாண் உழவா் நலத்துறை சாா்பில் திங்கள்கிழமை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து செந்துறை அடுத்த அசாவீரன்குடிகாடு கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளா்ச்சித் திட்ட தொடக்க விழாவுக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது அவா் தெரிவிக்கையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை விவசாயிகள் நன்கு பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி, தோட்டக்கலை துணை இயக்குநா் ஆனந்தன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சண்முகம் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.