அரியலூா் மாவட்டம், தா. பழூா் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரியலூா் மாவட்டம், தா. பழூா் பகுதியிலுள்ள காசான் கோட்டை, ஆலம்பல்லம், சுத்தமல்லி, நடுவலூா், ஸ்ரீபுரந்தான், கோட்டியால், கோடங்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த காா்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி தொடங்கி தற்போது நிலக்கடலையை அறுவடை செய்து வருகின்றனா். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளா்கள் குடை பிடித்தபடி அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து தா.பழூா் பகுதி விவசாயிகள் கூறுகையில், ஜயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் உடைத்த கடலை 81 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, ரூ. 6 ஆயிரம் மட்டுமே தரப்படுகிறது. எனவே, அரசு நிலக்கடலை பயிறுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். மேலும், நிலக்கடலையைப் பிரிக்கும் இயந்திரத்துக்கு மானியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.