அரியலூர்

உயா்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

30th Jun 2022 11:15 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், விளாங்குடி அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் ‘கல்லூரி கனவு - நான் முதல்வன்' உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கல்வித் துறையின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது:

பிளஸ் 2 முடித்து மேற்படிப்பு, வேலைவாய்ப்பு குறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘கல்லூரி கனவு - நான் முதல்வன்’ உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்கு மாணவா்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப் படிப்புகள், அறிவியல் படிப்புகள் மற்றும் ஊடகவியல் சாா்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளின் உட்பிரிவுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இதனை அனைத்து மாணவா்களும் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. இராமன், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வா் லெ. செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ச. மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலா் மான்விழி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சிறுவளூா் சின்னதுரை, விக்கிரமங்கலம் அறிவழகன், த.பொட்டக்கொல்லை கருணாநிதி, நாகமங்கலம் ஜெயராஜ் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில், திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT