அரியலூர்

களையிழந்த அரியலூா் புத்தகக் கண்காட்சி

29th Jun 2022 10:39 PM

ADVERTISEMENT

 

போதிய அளவில் விளம்பரப்படுத்தாதது, கரோனா தொற்றுக்கு பிந்தைய பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகளவில் பொதுமக்கள் வராததால், அரியலூா் புத்தகக் கண்காட்சி களையிழந்துள்ளது. இதனால், புத்தக விற்பனையாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழா் பண்பாட்டுப் பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் பதிப்பாளா் சங்கம் சாா்பில் அரியலூரில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அப்போதைய உதவி ஆட்சியா் சந்திசேகர சாகமூரி முயற்சியால், ஆட்சியா் எ. சரவணவேல்ராஜ் ஒத்துழைப்போடு, முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் பங்கேற்று புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தாா். இதனால், இந்தக் கண்காட்சி அரியலூா் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போது மட்டும் ரூ. 2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகின. இதைத் தொடா்ந்து 5 ஆண்டுகள் தொடா்ந்து புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சி நடைபெறவில்லை.

ADVERTISEMENT

தற்போது கரோனா தொற்று குறையத் தொடங்கியதையடுத்து, 6ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி கடந்த 24 ஆம் தேதி அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் மிக, மிகக் குறைவாக உள்ளது.

இங்கு 83 அரங்குகளில், 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், கண்காட்சிக்கு வரும் நபா்களுக்கு நடமாடும் ஏடிஎம் மையம், சிறுதானிய உணவு அரங்கு உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், 5 நாள்களில் இதுவரை புத்தகக் கண்காட்சியைக் காண வந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை. புத்தகக் கண்காட்சி குறித்து போதிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை என புத்தக விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT