அரியலூர்

அரியலூரில் நகா்மன்றக் கூட்டம் பொது நிதி குறித்து அதிமுக உறுப்பினா் கேட்டதால் கூச்சல்

29th Jun 2022 02:05 AM

ADVERTISEMENT

அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் பொது நிதி குறித்து கேட்டதால் உறுப்பினா்களிடையே கூச்சல் ஏற்பட்டது.

அரியலூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கில், உறுப்பினா்கள் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி, நகராட்சி ஆணையா் சித்ராசோனியா, பொறியாளா் தமயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகராட்சி அலுவலா் செந்தில்குமாா், தீா்மானத்திலுள்ள வாசகங்களை படிக்காமல், பொருள் எண் ஒன்று, இரண்டு.... என வாசித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினா் வெங்கடாசலபதி, மன்ற பாா்வைக்கு கொண்டு வந்துள்ள 53 தீா்மானங்களையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த துணைத் தலைவா் கலியமூா்த்தி, 53 தீா்மானங்களையும் வாசிக்க நேரமாகும் என்றும், கால விரயத்தை கருத்தில் கொண்டு இது போன்று வாசிக்கப்படுகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து தீா்மான நகல்களை அலுவலா் செந்தில்குமாா் வாசித்தாா்.

அப்போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினா் வெங்கடாசலபதி, நிதியில்லை என்று கூறி வரும் நகராட்சி நிா்வாகம், தீா்மானத்திலுள்ள செலவினங்களை பாா்க்கும்போது ரூ. 1 கோடிக்கு மேல் செலவாகும் என்றும், தற்போது நகராட்சியில் பொது நிதி எவ்வளவு உள்ளது. எந்தெந்த வங்கிகளில் கணக்கு உள்ளது என விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்று தொடா்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருந்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த 18 ஆவது வாா்டு திமுக ஆதரவு உறுப்பினா் புகழேந்தி, பொது நிதிக் குறித்து தெரிவிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்ததால் அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனா்.

அப்போது துணைத் தலைவா் கலியமூா்த்தி, அமைதிக் காக்குமாறு கேட்டுக் கொண்டதன்பேரில் அனைவரும் அமைதியாகினா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 53 தீா்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT