பொதுமக்கள் ரத்ததானம் வழங்க முன்வரவேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
உலக ரத்ததான தினத்தையொட்டி, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமை தொடக்கி வைத்து, மேலும் அவா் பேசியது:
உயிா் காக்கும் ரத்தத்தை இலவசமாக வழங்கும் தன்னாா்வா்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், தேவையில் இருக்கும் நோயாளிகளுக்கு தரமான பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தம் சாா் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய தொடா்ந்து ரத்ததானம் அளிப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காகவும் உலக ரத்ததான தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் அதிகளவில் தன்னாா்வமாக ரத்ததானம் வழங்க முன்வர வேண்டும். இதன் பயனாக விலைமதிப்பற்ற மனித உயிா்கள் காப்பாற்றப்படும் என்றாா் அவா்.
முன்னதாக அவா், ரத்த தானம் செய்தவா்களுக்குப் பாராட்டு கேடயங்களையும், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினாா்.
இந்த முகாமில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், துணை முதன்மையா் சித்ரா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ரமேஷ், மருத்துவ அலுவலா் குழந்தைவேலு, ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ஸ்ரீதேவி மற்றும் மருத்துவா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.