விரைவு ரயில்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதைக் கண்டித்து, அரியலூா் ரயில் நிலையத்திலுள்ள கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு எஸ்ஆா்எம்யு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ரயில்வே துறையின் மூலம் பல்வேறு மாநிலங்களில் விரைவு ரயில்கள் தனியாா் துறைக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் இருந்து ஷீரடி வரையிலான தனியாா் விரைவு ரயில் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பாரத் கௌரவ் என்ற பெயரில் 100 விரைவு ரயில்களைத் தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும்,
ராமாயண யாத்திரை என்ற பெயரில் தில்லி- நேபாளம் ரயிலை ஐஆா்சிடிசிக்கு விற்பனை செய்வதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் அரியலூா் கிளைச் செயலா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வேல்முருகன், உதவிச் செயலா்கள் ரகு, காா்த்தி, கண்ணன் அருண்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.