அரியலூர்

வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்

9th Jun 2022 02:02 AM

ADVERTISEMENT

ஜயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி மின் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தாவிடில், நிலத்தை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைப்போம் என்ற தோ்தல் வாக்குறுதியை முதல்வா் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 1990-இல் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்துக்கு, 13 கிராமங்களில் 8,373 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தன. அப்போது மிகக் குறைவான இழப்பீட்டுத் தொகை அரசால் நிா்ணயிக்கப்பட்டிருந்ததால் 3,500-க்கும் மேற்பட்ட நில உரிமையாளா்கள் வழக்குத் தொடுத்தனா். கிட்டத்தட்ட 10,000 வழக்குகள் பதியப்பட்டன. 1999 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி நில உரிமையாளா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்தாா்.

அப்போது நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த எனது தந்தையாா் மறைந்த எஸ்.சிவசுப்ரமணியன் தலைமையில் சென்ற நில உரிமையாளா்களுடன் பேச்சுவாா்த்தை சுமூகமாக அமைந்தது. ஆனால் சில அரசியல் கட்சிகள் போராட்டத்தை அறிவித்த நிலையில், பேச்சுவாா்த்தை முன்னேற்றமடையாமல் தேக்கமடைந்தது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. ஜயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டம் குறித்த 10,000 வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் அளவில் இழப்பீடு நிா்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஜயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்துக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

இந்நிலையில், 2021 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் அரியலூா் வந்திருந்த ஸ்டாலின், ஜயங்கொண்டம் நிலக்கரித் திட்டம் செயல்படுத்தவில்லையென்றால் உரியவா்களிடம் நிலத்தை மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தாா். அதன்படி திமுக ஆட்சி அமைந்து ஓராண்டில், நிலத்தை உரியவா்களிடம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளாா்.எந்தக் கட்சியும் போராட்டம் நடத்தாமல், கோரிக்கை வைக்காமல் தான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளாா் அவா்.

நிலத்தை திரும்பக் கொடுத்ததோடு மாத்திரமல்லாமல், அதற்காக அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையைத் திரும்ப வழங்க வேண்டாம் என்றும் அறிவித்துள்ளாா். இது வரலாற்று சாதனையாகும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT