அரியலூா் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
அரியலூா் மாவட்டம், புதுபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரப்பிள்ளை மகன் கண்ணன் (47). கடந்த 2020 ஆம் ஆண்டு இவா், தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில், அரியலூா் மகளிா் காவல் துறையினா் விசாரித்து கண்ணனை கைதுசெய்தனா். இது தொடா்பான வழக்கு அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த், சிறுமிக்கு பாலியல் குற்றம்இழைத்த கண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபாரதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் ம.ராஜா ஆஜராகி வாதாடினாா்.