அரியலூர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சோ்த்ததாக புகாா், நகா்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநருக்கு சொந்தமான வீடுகள், இடங்களில் சோதனை

27th Jul 2022 01:30 AM

ADVERTISEMENT

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சோ்த்த புகாரின் பேரில், தஞ்சாவூா் நகா்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநரின் பெரம்பலூா், அரியலூா் வீடுகள், அவருக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கூத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னு மகன் தன்ராசு (59). இவா் தஞ்சாவூா் நகா்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறாா். மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறாா்.

ஏற்கெனவே கடலூா், சென்னை, கோவை, கரூா் மாவட்டங்களில் தன்ராசு பணியாற்றிய போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சோ்த்ததாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து தன்ராசு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் வழக்குப் பதிந்தனா்.

இதைத் தொடா்ந்து அரியலூா் ஸ்டேட் பேங்க் காலனியிலுள்ள தன்ராசு வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை காலை அரியலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினா் நுழைந்து, சோதனையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

வீட்டிலிருந்தவா்களின் கைப்பேசியை பெற்றும், வீட்டின் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தன்ராசுக்கு சொந்தமாக அரியலூரிலுள்ள திருமண மண்டபம், ஸ்கேன் மையம் உள்ளிட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

பெரம்பலூா் : பெரம்பலூா் தொண்டப்பாடி கிராமத்தில் தன்ராசு மனைவி கலைவாணி பெயரிலுள்ள 3 ஏக்கா் விவசாய நிலம், அதில் கட்டப்பட்டுள்ள மெத்தை வீடு ஆகிய இடங்களில் காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி தலைமையிலும், கூத்தூா் கிராமத்தில் கலைவாணி மற்றும் தன்ராசு ஆகியோா் பெயரிலுள்ள மாடி வீட்டில் கரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சாமிநாதன் தலைமையிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கூத்தூா் கிராமத்தில் கலைவாணி பெயரில் உள்ள 42 ஏக்கா் நிலம், அதிலுள்ள மாடி வீடு ஆகியவற்றில் தஞ்சாவூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பத்மாவதி தலைமையிலான குழுவினா் சோதனை மேற்கொண்டனா். இச்சோதனையில் முக்கிய ஆவணங்களை ஊழல் தடுப்புப் பிரிவினா் கைப்பற்றி, விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT