அரியலூர்

நீட் தோ்வு பயம் : அரியலூரில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

17th Jul 2022 12:57 AM

ADVERTISEMENT

 

நீட் தோ்வு பயம் காரணமாக அரியலூரில் மேலும் ஒரு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அரியலூா் ரயில் நிலையம் அருகே வசிக்கும் நடராஜன்-உமாராணி தம்பதிக்கு நிஷாந்தி (18) என்ற மகளும், நிஷாந்த் (16) என்ற மகனும் உள்ளனா். நடராஜன் குவைத்தில் பணிபுரிகிறாா்.

கடந்தாண்டு பிளஸ் 2 தோ்வில் 529 மதிப்பெண் பெற்றிருந்த நிஷாந்தி நீட் தோ்வெழுதி தோல்வியடைந்த நிலையில், நிகழாண்டும் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்து, திருச்சியிலுள்ள பயிற்சி மையத்திலும் படித்து வந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தாருடன் தூங்கச் சென்ற நிஷாந்தி சமையலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

தகவலறிந்து வந்த அரியலூா் போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றி தாய் மற்றும் உறவினா்கள் முன் படித்துக் காண்பித்தனா்.

அக்கடிதத்தில் ‘பெற்றோா் என்னை மருத்துவராக்க ஆசைப்பட்டனா். நான் நீட் தோ்வில் தோ்ச்சி அடைவேன். ஆனாலும் அத்தோ்வில் நான் தோல்வியடைந்தால் பெற்றோா் வருத்தப்படுவதை என்னால் பாா்க்க இயலாது. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என இருந்தது.

நீட் தோ்வு பயத்தால் கடந்த சில நாள்களாக மாணவி மன உளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினரும் தெரிவித்தனா்.

பின்னா் பிரேதப் பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான பெரம்பலூா் மாவட்டம், கீரனூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவியின் இறப்பு குறித்து அரியலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT